ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (12:52 IST)

தமிழக மக்களுக்கு நன்றி : இனி உங்கள் பிரச்சனைக்கு நாங்கள் வருவோம் : கேரள வாலிபர் நெகிழ்ச்சி

கேரளாவுக்கு பல வகைகளில் உதவிய தமிழக மக்களுக்கு கேரளாவை சேர்ந்த ஒரு நபர் நன்றி கூறி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

 
சமீபத்தில் கேரளாவில் பெய்த மழையால் அம்மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. நிலச்சரிவுகள் காரணமாக பலரின் வீடுகள் இடிந்து விழுந்து விட்டது.  பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். 
 
மழையின் காரணமாக 700-க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மழையால் ஏற்பட்ட சேத மதிப்பு 20 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.  
 
கேரள மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து அரசியல் கட்சிகள் முதல் நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து பலரும் அத்தியாவசப் பொருட்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது மழை நின்றுவிட்டதால் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வாலிபர் முகநூலில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “ தமிழர்கள் என்றாலே முன்பு ஒரு மாதிரி இங்கு பார்ப்பார்கள். அவர்கள் அதிகம் படிக்காதவர்கள் என நினைப்பார்கள். ஆனால், இப்போது முகாம்களில் இருக்கும் எங்கள் மக்களுக்கு தமிழர்கள்தான் இரு சைக்கிள் வாகனங்கள் மற்றும் லாரிகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தனர்.
 
தற்போதும் அனுப்பி வருகின்றனர். ஜல்லிக்கட்டின் போது உங்கள் சக்தியை காட்டினீர்கள். தற்போது உங்கள் மனதில் இருக்கும் அன்பை காட்டியுள்ளீர்கள். இதற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்போம். 2 நாட்கள் முகாமில் இருந்த எனக்கு இது தெரியும் போது, அங்குள்ள அத்தனை பேருக்கும் இது தெரிந்திருக்கும். தமிழக மக்களின் அன்புக்கு மிகவும் நன்றி. இனிமேல், தமிழ்நாட்டுக்கு ஏதும் பிரச்சனை எனில் நாங்கள் அனைவரும் வந்து நிற்போம்” என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.