வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 மே 2019 (08:51 IST)

சூலூரில் பிரச்சாரத்திற்கு தடை – விளக்கமளித்த கமல் !

சூலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது என சொந்த கட்சி உறுப்பினரின் மனைவியே புகார் மனு கொடுத்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் விளக்கம் அளித்துள்ளார்.

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த 4 தொகுதிகளுக்கான தேர்தலுக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம் தனது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியும் ஒன்று. அந்த தொகுதியில் கமல் பிரச்சாரம் செய்ய வரக்கூடாது என கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் பாலமுருகன் என்பவரின் மனைவிதான் கொடுத்துள்ளார். தேர்தல் பரப்புரைக்கு சென்றபோது பாலமுருகன் உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் இறப்புக்கு கமல் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் தொண்டர்களையே கண்டு கொள்ளாத கமல் மக்கள் பிரச்சனைகளை எப்படி போக்குவார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கமலிடம் கேள்வி எழுப்பியபோது ‘அந்த மனுவை அவராகக் கொடுத்தாரா அல்லது பிற கட்சியினர் கொடுக்க வைத்தார்களா என்று தெரியவில்லை. அவர் கணவர் இறந்தவுடன் அந்த பெண் சார்பில் பிறக்கட்சியினர் எங்கள் கட்சிக் காரர்களிடம் பணம் கேட்டுள்ளனர். அப்படி நாங்கள் பண உதவி செய்வதாக இருந்தால், அந்த குடும்பத்தினருக்கே நேரடியாக செய்வோம். பாலமுருகனின் மறைவின் போது அவரது வீட்டில் மக்கள் நீதி மய்யத்தினர் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இருந்தார்கள். இன்னமும் கூட அவர்கள் சென்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.’ எனத் தெரிவித்துள்ளார்.