ரஜினி-பெரியார் விவகாரம்: கமல்-சீமான் அமைதியாக இருப்பது ஏன்?
ரஜினிகாந்த் எந்த ஒரு விஷயத்தை கூறினாலும் அது குறித்து ஒரு வாரம் விமர்சனம் செய்ய வேண்டும் என்பது தமிழக அரசியல்வாதிகளில் கொள்கை முடிவாக இருந்து வருகின்ற நிலையில் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஊடகங்களில் இந்த வாரம் இதுதான் தற்போது தலைப்புச் செய்தியாக இடம் பெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம், ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகிய பிரச்சனைகளை ஊடகங்கள் கிட்டத்தட்ட மறந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஜினி என்ன கூறினாலும் உடனடியாக விமர்சனம் செய்யும் நாம் தமிழர் கட்சியின் சீமான் இந்த விவகாரம் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் வாயைத் திறக்காமல் அமைதியாக உள்ளார். சீமானை பொறுத்தவரை அவர் பெரியார் கொள்கைக்கும் எதிரானவர், ரஜினிக்கும் எதிரானவர் என்பதால் இந்த விஷயத்தில் எந்த பக்கம் கருத்து கூறினாலும் தனக்கு இதனால் எந்தவிதமான ஆதாயமும் இல்லை என்பதால் அவர் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது
அதேபோல் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் இந்த விஷயத்தில் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. ரஜினி தனக்கு நெருங்கிய நண்பராக இருந்தாலும் அவ்வப்போது அவர் மறைமுகமாக ரஜினியை விமர்சனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக ரஜினியுடன் இணைந்து அவர் அரசியல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரஜினியை பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை என்பதால் அவர் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது
மொத்தத்தில் ரஜினியை விமர்சனம் செய்து விளம்பரம் தேட முயலும் அனைத்து அரசியல்வாதிகளும் இது குறித்து கருத்து தெரிவித்து விட்டார்கள். கமல் மற்றும் சீமான் வேறு வழி இல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.