அப்போலோவில் ஜெ ; சிசிடிவி பதிவுகள் சசிகலா வசம் : பின்னணி என்ன?

Last Modified வியாழன், 20 செப்டம்பர் 2018 (12:19 IST)
ஜெ. சிகிச்சை தொடர்பான, அதுவாக அழிந்துவிட்டதாய் அப்போலோ மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட சிசிடிவி பதிவுகள் சசிகலா குடும்பத்தினரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

 
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஓய்வு  பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையம், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறுதி வரையிலான சிசிடிவி பதிவுகளை கேட்டு சமீபத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது. 
 
ஆனால், அதற்குபதில் கொடுத்த அப்போலோ நிர்வாகம், அதிகபட்சமாக 45 நாட்கள் வரை மட்டுமே சிசிடிவி பதிவுகள் இருக்கும். புதிதாக அடுத்த காட்சிகள் பதிவாகும்போது பழைய காட்சிகள் தானாக அழிந்துவிடும். எனவே, ஜெ. தொடர்பான சிசிடிவி பதிவுகள் அழித்துவிட்டது என பதில் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், இதை ஏற்காத விசாரணை ஆணையம்  மீண்டும் அப்போலோ நிர்வாகத்திடம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.
 
போயஸ்கார்டனில் ஜெ. மயங்கி விழுந்தது முதல், அப்போலோவில் சிகிச்சை பெற்றவரை எந்த சிசிடிவி கேமரா பதிவுகள் யார் கையிலும் சிக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த சசிகலா, ஜெ. சிகிச்சை தொடர்பான அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஏற்கனவே அப்போலோவில் இருந்து வாங்கிக் கொண்டார். அது தொடர்பான பென் டிரைவ் அல்லது ஹார்ட் டிஸ்க் தற்போது அவரின் குடும்பத்தினர் ஒருவரின்  வசம் இருப்பதாக கூறப்படுகிறது. 

 
ஆணையம் நெருக்கடி கொடுக்க, தினகரன் தரப்பிடம் அந்த பதிவுகளை தருமாறு அப்போலோ நிர்வாகம் கேட்டதாம். ஆனால், அது என்னிடம் இல்லை. சின்னம்மா யாரிடமோ கொடுத்துள்ளார். ஆணையம் கேட்டால் எல்லாவற்றையும் தரவேண்டுமா? என்கிற ரீதியில் தினகரன் பேச, இறுதி வரை முடியாமல், வேறுவழியின்றி அந்த பதிவுகள் அழிந்துவிட்டதாக தற்போது ஆணையத்திடம் தெரிவித்துள்ளது அப்போலோ நிர்வாகம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
 
ஏற்கனவே, ஜெ.சிகிச்சை பெற்ற ஒரு வீடியோவை சசிகலா தரப்பு வெளியிட்டது போல், தேவைப்படும் போது மேலும் சில வீடியோக்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு தங்கள் மீது சுமத்தும் களங்கத்திற்கு பதிலடி கொடுக்கும் படி தக்க சமயத்தில் வெளியிடுவதற்காகவே அந்த பதிவுகள் சசிகலா குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :