இன்னும் 7 நாளில் ஜெ. சிகிச்சை சிசிடிவி காட்சிகள் வர வேண்டும்: அப்பல்லோவிற்கு கெடு
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல் நல குறைவால் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாள்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார்.
ஆனால், இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து இவரது மரணம் குறித்த மர்மத்தை விளக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் பலரிடமும் விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை அப்பல்லோ மருத்துவமனை 7 நாட்களில் சமர்பிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் கெடு விதித்துள்ளது.
செப். 22 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு பேஸ்மேக்கர் பொருத்தபட்ட நிலையில் அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைவு என செய்திக்குறிப்பு வெளியிட்டது ஏன்? இவ்வாரு வெளியிட யார் ஒப்புதல் வழங்கியது? என பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அப்பல்லோ நிர்வாகம் ஏற்கனவே சிசிடிவி காட்சிகள் இல்லை என்று கூறியுள்ள நிலையில், இந்த 7 நாட்கள் கெடுவிற்கு பிறகு என்ன நடக்கும் என்பது விடையில்லா கேள்வியாக உள்ளது.