1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 டிசம்பர் 2017 (15:25 IST)

ஜெ. எடுக்க சொன்னார்..சசிகலா எடுத்தார் - கிருஷ்ணப்ரியா பேட்டி

வீடியோவை வெளியிட்டு ஜெ.விற்கு வெற்றிவேல் துரோகம் செய்துள்ளார் என இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தெரிவித்துள்ளார்.


 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார்.    
 
20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ஜெ. மாற்றப்பட்ட போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 
 
சசிகலா குடும்பதினர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழி சொல்லை நீக்கவே இந்த வீடியோவை வெளியிட்டதாக அவர் தெரிவித்துளார்.  சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் “தினகரன் உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்” என பதிவிட்டிருந்தார்.
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணபிரியா “இந்த வீடியோ ஜெயலலிதா எடுக்க சொல்லி சசிகலாதான் எடுத்தார். இதை விசாரணை கமிஷன் கேட்டால் கொடுக்க வேண்டும் எனக்கூறி நாங்கள் தினகரனிடம் கொடுத்தோம். மக்கள் பார்ப்பதற்காக அல்ல.
 
ஜெ.விற்கு வெற்றிவேல் துரோகம் செய்துள்ளார். உண்மையான தொண்டன் எனில் ஜெ. இப்படை உடையணிந்திருக்கும் வீடியோவை அவர் எப்படி வெளியிட்டார்?
 
இப்போது இந்த வீடியோவை வெளியிட வேண்டிய அவசியமில்லை. வெற்றிவேல் மீது தினகரன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இன்னும் இதுபற்றி தினகரனிடம் பேசவில்லை.
 
கொலைபழி சுமத்தப்பட்ட போது கூட சசிகலா இதை வெளியிடவில்லை. அது அவர் ஜெ.வின் மீது வைத்துள்ள அன்பு மற்றும் மரியாதை. தினகரனிடம் கொடுத்த வீடியோ எப்படி வெற்றிவேல் கையில் சென்றது? இதை வெளியிட வேண்டும் என நினைத்திருந்தால் சசிகலா எப்போதே வெளியிட்டிருக்கலாம். வெற்றிவேலின் இந்த செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.