வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (12:54 IST)

தம்பிதுரைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜெயகுமார்: என்ன நடக்கிறது அதிமுகவில்?

பாஜகவிற்கு எதிராக தம்பிதுரை பேசியதில் எந்த தவறும் இல்லை என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
 
சமீபகாலமாக பாஜக குறித்தும் மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அதிமுக முக்கிய தலைவரும் மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை. அதிமுகவில் இருந்துக்கொண்டு இவர் மட்டும்தான் பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருகிறார். ஆனால் அதிமுக அமைச்சர்கள், பாஜக குறித்து தம்பிதுரை பேசுவது அவரின் தனிப்பட்ட கருத்து என சமாளித்து வந்தனர். 
 
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுமே மக்கள் பயன் பெறும் விதமாக இல்லை எனவும், முக்கியமாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு குறி வியாபாரிகள் பெரிதாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 
 
கஜா, தானே, ஓகி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் பல விஷயங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து 10,000 கோடி நிதி வர வேண்டியது இருக்கு தமிழகத்திற்கு. ஒவ்வொரு முறையும் காசுக்காக உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது. மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என சொல்லும் மத்திய அரசு சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வது ஏன்? துணிகளை ஏன் பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்கிறது? என கேள்வி எழுப்பினார். இவரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில், பொன்முடி தம்பிதுரையின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்தா அல்லது அதிமுகவின் ஒட்டுமொத்த கருத்தா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜெயகுமார், தம்பிதுரை பேசியதில் எந்த தவறும் இல்லை எனவும் மத்திய அரசின் திட்டங்களால் மாநில அரசுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்புவது மாநில அரசின் கடமை. ஆகவே தம்பிதுரை பேசியதில் தவறேதும் இல்லை என கூறினார்.
 
முன்பெல்லாம் தம்பிதுரை பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் ஜெயகுமாரே கூறி வந்த நிலையில் திடீரென அவர் தம்பிதுரைக்கு சப்பைக்க்ட்டு கட்டுவது ஏன் என கேள்வி எழுகிறது. நம் சந்தேகங்களுக்கான விடை விரைவில் தெரியவரும்...