1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 13 மே 2024 (21:12 IST)

ஜெயக்குமார் மரண வழக்கு.! சபாநாயகரிடம் விசாரணை.?..! தென்மண்டல ஐ.ஜி. முக்கிய அப்டேட்..!!

Jayakumar
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்மமாக உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தேவைப்பட்டால் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் விசாரணை நடத்தப்படும் என்று தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் தெரிவித்தார்.
 
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஜெயக்குமார் மரணத்தில் இன்னும் மர்மம் நீடிக்கிறது.
 
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன், ஜெயக்குமார் காணாமல் போனதாக புகார் அளிக்க வந்தபோது 2 கடிதங்களை அவரது குடும்பத்தினர் கொடுத்ததாக தெரிவித்தார்.
 
அந்த 2 கடிதங்களிலும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாகவும், அரசியல் விவகாரம் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் முதல் கடிதத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எழுதி இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். ஜெயக்குமார் சடலமாக கண்டடுக்கப்பட்டபோது அவரது உடலில் கடப்பாக்கல் கட்டப்பட்டிருந்தது என்றும் கை, கால்கள் லூசாக கம்பிகளால் கட்டப்பட்டு, உடல் கருகிய நிலையில் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
 
பின்னங்கால் முழுவதும் எரியாத நிலையில் இருந்தது. பின்பகுதி எதுவும் எரியாமல் இருந்தது. பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பர் அவரது வாயிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது என்று ஐஜி கண்ணன் கூறினார். கிடைத்த தகவல் மற்றும் தடயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தற்போது 10 டி.எஸ்.பிகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலனாய்வு நடந்து வருகிறது என்றும் உடற்கூறு ஆய்வு அறிக்கை முழுமையாக இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
முதற்கட்ட இடைக்கால ஆய்வறிக்கை மட்டுமே கிடைத்துள்ளது என்ற அவர்,  உடலில் எந்தவிதமான வெட்டுக்காயங்களும் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தார். ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும்  அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது என்றும் ஐ.ஜி கண்ணன் குறிப்பிட்டார்.

முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கொலையா, தற்கொலையா என என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று விளக்கம் அளித்த அவர்,  இந்த வழக்கு விசாரணை கூடிய விரைவில் முடிவு பெறும் என்று தெரிவித்தார்.
 
கொலையான ஜெயக்குமாருக்கும் தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவுக்கும் பிரச்சினை இருந்ததாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவை தலைவரிடம் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, கடிதத்தில் அவர் பெயர் இருக்கிறது என்றும் தேவைப்பட்டால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தென்மண்டல ஐஜி கண்ணன் பதில் அளித்தார்.