பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ. பதவி வழங்கப்படுமா.? சபாநாயகர் அப்பாவு விளக்கம்.!!
பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து உடனடியாக பொன்முடி தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை இழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடியின் சிறை தண்டனை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், பொன்முடிக்கு பதவி வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, பொன்முடி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அவருக்கான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதால், வயநாடு எம்.பி. ராகுல் காந்தி எப்படி பதவியைப் பெற்றாரோ, அதேபோல் பொன்முடிக்கு பதவியை மீண்டும் வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். அவருக்கு பதவி வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அப்பாவு கூறினார்.