வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 13 மே 2024 (18:03 IST)

வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்கள்.! முகத்தை காட்ட சொன்ன பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு..!!

BJP Canditate
மக்களவைத் தேர்தலை ஒட்டி வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண் வாக்காளர்களிடம் அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்த பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்றது. இந்நிலையில் ஹைதராபாத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில்  மாதவி லதா போட்டியிடுகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தின்போது மசூதியை பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்குள்ளானார்.
 
இதற்கிடையே நான்காம் கட்டத் தேர்தலில் வாக்களிக்க பர்தா அணிந்து வந்த முஸ்லிம் பெண்களிடம், பாஜக வேட்பாளர் மாதவி லதா அடையாள அட்டையை காண்பிக்கச் சொன்னதுடன், பர்தாவை நீக்கி முகங்களை காண்பிக்கச் சொல்லி சோதனை செய்துள்ளார். இந்தச் செயல் சர்ச்சையான நிலையில், மாதவி லதா மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்க்க அவர்களின் பர்தாவை நீக்க சொல்ல எந்த வேட்பாளரும் உரிமை இல்லை என்றும் வாக்காளர்கள் மீது சந்தேகம் இருந்தால் தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர் முறையிட்டு இருக்கலாம் என்றும் ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  மாதவி லதா மீது மலக்பேட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

 
ஆனால், வாக்காளர் அடையாள அட்டைகளை சரிபார்க்க ஒரு வேட்பாளருக்கு உரிமை உண்டு என்று மாதவி லதா விளக்கம் அளித்துள்ளார். வாக்குச்சாவடிகளில் காவல் துறையினர் மிகவும் மந்தமாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.