திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (13:33 IST)

சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும்..மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஆவேசம்..!

கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியிருப்பதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம்  வீசுமாறு வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றியிருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 
 
திமுகவுக்கும் காங்கிரசுக்கும் தொடர்ந்து வாக்களித்து வருவதால் “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாறிவிட்டார்கள்” என்று சீமான் பேசியுள்ளார். இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற  செயலுமாகும். இதை  வன்மையாக கண்டிக்கிறோம். 
 
மணிப்பூரில் நடக்கின்ற வன்முறைகளுக்கு யார் காரணமோ..? யார் மௌனமாக இருந்து வன்முறைகளை ஆதரிக்கிறார்களோ.? அவர்கள் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தங்களுடைய தாக்குதல் இலக்காக வைத்திருக்கும் பொழுது, சீமானுக்கும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தான் தாக்குதல் இலக்குகளாக இருக்கிறார்கள். இதுவே இவர் யாருக்காக பேசுகிறார், யாருடைய நலனுக்காக செயல்படுகிறார் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.  இத்தகைய குழப்பவாதங்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
 
 சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான,அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
 
முன்பு தாய் மதத்திற்கு திரும்புங்கள் என  சங்கப்பரிவார் தொண்டர் போல் பேசியவர் சீமான்.  தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். இத்தகைய வேடாதாரிகளிடம் தமிழக மக்கள் எச்சரிகையாகவே இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்
 
 
Edited by Mahendran