புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (10:29 IST)

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த எதிரொலி – சம்பளம் பிடிக்கும் அரசு…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் (ஜனவரி 22) அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவுறுத்தியுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7ஆவது ஊதியக் குழுவின் ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகியக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பல்வேறு வகையானப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இது சம்மந்தமான அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையில் நடந்த பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதையடுத்து நாளை முதல் தொடர் போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

கிட்டதட்ட எல்லா ஆசிரியர் சங்கங்களும் ஜாக்டோ ஜியோ அமைப்போடு இணைந்து போராட்டத்தில் பங்கேற்க உள்ளன.இதற்குப் பதிலடியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுப் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வேலைநிறுத்த நாட்களில் மாவட்ட வாரியாக பணிக்கு வராத ஆசியர்களின் பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

விரைவில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கவுள்ளதால் ஆசிரியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் அதனால் அரசு உடனடியாக ஆசிரியர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வேலை நிறுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.