செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (10:23 IST)

அரசு அவகாசம் மட்டுமே கேட்கிறது, ஆனால் நடவடிக்கை…..– கொதிக்கும் அரசு ஊழியர்கள் !

உயர்நீதிமன்றத்தில் அளித்திருந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ திரும்பபெற்றுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7ஆவது ஊதியக் குழுவின் ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகியக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பல்வேறு வகையானப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இது தொடர்பான அரசுக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்புக்கும் இடையிலான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளின் அறிவுறுத்தலின் பேரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உத்தரவாதம் அளித்திருந்தனர்.

இது சம்மந்தமாக நேற்று நடைபெற்ற விசாரணையில் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை எனக் கூறி வேலை நிறுத்தம் செய்யமட்டோம் என்ற உத்தரவாதத்தை திரும்பப்பெற்றது ஜாக்டோ ஜியோ. அதனால் திட்டமிட்டப்படி வரும் 22 ஆம் தேதி முதல் தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றமும் அரசு தாமதம்  செய்வதால் போராட்டத்திற்குத் தடை விதிக்க முடியாது என அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை ஜனவரி 28 ஆம் தேதி நடக்க இருக்கிறது.