விஜயகாந்தின் அரசியலை முடித்து வைத்தவர் பிரேமலதா.! மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்..!!
விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை முடித்து வைத்தவர் பிரேமலதா என்றும் விருதுநகர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதால் விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையை முடித்து வைத்தவர் பிரேமலதா என்று கடுமையாக விமர்சித்தார். வாக்கு எண்ணிக்கையின் போது ராஜேந்திர பாலாஜி, விஜய பிரபாகரன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையத்தில்தான் இருந்தார்கள் என்றும் தற்போது பிரேமலதா பொய் குற்றச்சாட்டை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
நேர்மையான அதிகாரிகள் மீது தவறான குற்றச்சாட்டை வைக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், பொய் புரட்டை முன்வைத்து பரப்புரை செய்த பிரேமலதா இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டது என்றால் அங்கேயே கேட்டிருக்கலாமே என்று கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர், தோல்விக்கு பின் அங்கிருந்து அமைதியாக கிளம்பி சென்று விட்டு இப்போது புகார் கூறுவது ஏன்? என்றும் பிரேமலதாவின் சாதி அரிசியில் தோல்வி அடைந்திருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.