பிரதமருக்கு தமிழர்களை பிடிக்கும்.. அதற்காக தமிழர்களை முதல்வராக்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!
ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது குறித்து மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒடிசாவில் பிரச்சாரம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவின் பூரிஜெகன்நாதர் கோவில் சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்ட தைரியத்தில் தமிழர்களை பிற மாநிலங்களில் அவதூறாக பேசி வருவதாக கூறியிருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கருத்துக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணாமலை “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்வதையே முழு நேர வேலையாக வைத்துள்ளார். பிரதமர் மோடி தமிழர்களை அவமதித்ததாக கூறுகிறார்.
ஒடிசாவில் முதலமைச்சரான நவீன் பட்நாயக்கை யார் சந்திக்க வேண்டுமென்றாலும் அதற்கு தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியனிடம் அனுமதி பெற வேண்டும். ஒடிசாவின் மாநில அரசை அம்மாநிலத்தை சாராத ஒருவர் இயக்குவது தவறுதானே. பூரி ஜெகன்நாதர் கோவில் கருவூல சாவி காணாமல் போய்விட்டது. அதை யாரோ திட்டமிட்டு மறைத்துள்ளனர். அதற்கு காரணம் முதல் மந்திரியும், அவருக்கு பக்கபலமாக நிற்கும் விகே பாண்டியனும்தானே.
தமிழகத்தில் தமிழர்தான் ஆள வேண்டும் என்று கூறிக்கொண்டு ஒடிசாவிற்கு மட்டும் தனி நியாயம் சொல்ல முடியுமா? அங்கு ஒடிசாவையே சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவோம் என்றுதான் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடிக்கு தமிழர்கள் மீது அளவுகடந்த அன்பு, அக்கறை இருக்கிறது. அதற்காக அனைத்து மாநிலங்களிலும் தமிழர்களை முதலவராக்க முடியுமா? எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் குறித்து பொய் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார்
Edit by Prasanth.K