செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (12:05 IST)

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை..! தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக மனு..!!

premalatha vijayakanth
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதால் விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இமெயில் மூலம் தேமுதிக புகார் மனு அனுப்பியுள்ளது.
 
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், நாடு முழுவதும் ஜூன் நான்காம் தேதி  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விருதுநகர் தொகுதியில் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்த விஜய பிரபாகரன், இறுதியில்  வெறும் 4,379  வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்.
 
இந்நிலையில் விஜய பிரபாகரன் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை என்றும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார் என்றும் புகார் தெரிவித்தார்.
 
திட்டமிட்டு சூழ்ச்சியால் விஜய பிரபாகரனை வீழ்த்தியுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ள பிரேமலதா, மதிய உணவு இடைவேளையின் போது இரண்டு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் நள்ளிரவில்தான் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13-வது சுற்றில் இருந்து முறைகேடு நடந்துள்ளது என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் பிரேமலதா புகார் தெரிவித்துள்ளார்.  தனக்கு அழுத்தம் வருவதால் செல்போனை அணைத்து வைப்பதாக விருதுநகர் ஆட்சியர் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இமெயில் மூலம் புகார் கடிதம் அனுப்பி உள்ளதாகவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் பிரேமலதா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.