1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 23 மே 2024 (21:03 IST)

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

EVKS
பாஜக அலுவலகத்தை முற்றுகையிட வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு மாட்டிறைச்சி சமைத்து வைக்கவும், அதை விரும்பி சாப்பிட தயாராக இருக்கிறோம் எனவும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழர்களை திருடர்கள் என்று பொருள் கொள்ளும் வகையிலான  பிரதமர் மோடியின் பேச்சுக்கு, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த பேச்சுக்கு மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்காவிட்டால், பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தை முற்றுகையிடுவோம் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.
 
இதற்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கவும் வசதியாக இருக்கும் என்று பதிலடி கொடுத்திருந்தார்.
 
இந்நிலையில்  சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய  ஈவிகேஎஸ் இளங்கோவன், பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் குறித்து எப்போது, எத்தனை பேர் வருவார்கள் என்ற விவரத்தை மாநிலத் தலைவர் முறைப்படி அறிவிப்பார். அதற்கு முன்பாக அண்ணாமலைக்கு நான் ஒரு வெண்டுகோள் வைக்கிறேன். சாப்பாடு செய்யும் போது மாட்டிறைச்சியை செய்யுங்கள். நாங்கள் விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்.


நீங்கள் திமுக, காங்கிரஸ் மீது இட்டு கட்டி தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததாக புத்தகத்தைத் தாருங்கள். நாங்கள் வாங்கிக்கொள்கிறோம். நாங்கள் மோடி சொந்த குடும்பத்துக்கே செய்த துரோக புத்தகத்தை தருகிறோம், அதையும் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.