வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 13 மே 2024 (16:37 IST)

அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதியா.? ஆளுநர் மாளிகை விளக்கம்..!!

Annamalai
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடர அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தனர்
 
இந்த வழக்கு விசாரணை சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர், அண்ணாமலை மீது 2 பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிநாடு அரசின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டார்.
 
இதனிடையே, பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அளித்த புகாரின் பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாக தமிழக அரசு முடிவு செய்து, வழக்கு தொடர்வதற்கான அனுமதியை அளித்து உத்தரவிட்டது. தமிழக அரசின் முக்கிய ஆணைகள் வழக்கமாக ஆளுநரின் உத்தரவுடன் எனக் குறிப்பிட்டு வெளியாவது போன்றே இந்த அனுமதி ஆணையும் வெளியிடப்பட்டது.
 
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து கடந்த 2 நாட்களாக ஆளுநர் மாளிகைக்கு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

 
அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.