செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (11:43 IST)

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு - அமைச்சர் கூறுவது என்ன?

இந்தியாவை பொறுத்தவரை ஒமைக்ரான் மூலம் 3வது அலைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தொற்று பரவி 72 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானது.
 
இந்நிலையில். தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கணகாணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட நபர் ஏற்கனவே 2 கட்ட தடுப்பூசியும் போட்டுள்ளார். 
 
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது அவசியமானது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆக்சிஜன், வெண்டிலேட்டர், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட உயிர் காக்கும் வசதிகள் அனைத்தும் எல்லா மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
 
டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறது. ஆனால் பாதிப்பு எந்த அளவு இருக்கும் என்பதை இதுவரை உறுதியாக கணிக்க முடியவில்லை. இந்தியாவை பொறுத்தவரை ஒமைக்ரான் வைரஸ் மூலம் 3வது அலைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். எனவே மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.