வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:18 IST)

குப்பைக்கு விருது - கோவை முதலிடம் பிடிக்கும்..! அதிமுக எம்எல்ஏ கடும் விமர்சனம்..!!

admk protest
சென்னையில் பட்டியலின மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் குப்பைக்கு விருது வழங்க வேண்டும் என்றால் அதில் கோவை முதலிடம் பிடிக்கும்  என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் விமர்சித்துள்ளார்.
 
சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பணியில் இருந்த பட்டியலின மாணவி சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அக்கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், முன்னாள் அமைச்சர் வேலுசாமி உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சமத்துவம் பேசும் திமுக தனிப்பட்ட முறையில் தீண்டாமையை பின்பற்றி வருவதாக குற்றம் சாட்டினார். அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் பணியாற்றிய மாணவியை சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மருமகள் இணைந்து கொடூரமாக சித்தரவதை செய்தும் அதற்காக வழக்கு பதிவு செய்யக்கூட காவல்துறை முன் வரவில்லை என்றார்.
 
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.  மேலும் கோவை மாநகரில் எங்கும் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை எனவும் குப்பை நகரில் நாம் வசித்து வருகிறோம் என்றும் குப்பைக்கு  விருது வழங்க வேண்டும் என்றால் அதில் கோவை தான் முதலிடம் பிடிக்கும் என்றும் அவர் விமர்சித்தார். 

 
கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சி  பல்வேறு விருதுகளை பெற்றதாகவும் தற்போது தமிழக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் இதுவரை ஒரே ஒரு விருது மட்டுமே கோவை மாநகராட்சி பெற்றுள்ளதாகவும் அம்மன் அர்ஜுனன் குறிப்பிட்டார்.