விவசாயிகள் நாகரீகமாக போராட வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் தமிழர்களின் நாகரீகமாக போராட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்திய விவசாய சங்கம் சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடெங்கிலும் இருந்து 4 லட்சம் விவசாயிகள் பங்குபெற்றுள்ளனர். தமிழகத்தை சார்ந்த பல விவசாயிகளும் இந்த போடாட்டத்திற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர்.
நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக விவசாயிகள் திடீரென நிர்வாணப் போராட்டத்தை நடத்தினர். திடீரென துணிகளை அவிழ்த்து ரோட்டில் படுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அருகிலிருந்த சக விவசாயிகள் கண்கலங்கினர். இந்த போராட்டத்தை பார்த்த மக்களும் கதிகலங்கிப் போனார்கள்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவசாயிகளின் கோரிக்கைகளை பாஜக அரசும், மாநில அரசும் சேர்ந்து கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. விவசாயிகள் தங்கள் அறவழிப் போராட்டங்களை அமைதியாகவும், நாகரீகமாகவும், நமது பண்பாட்டுக்கு எவ்விதக் குறைவும் ஏற்பட்டு விடாமலும் நடத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.