“கருத்துரிமை வரம்புக்கு உட்பட்டது”.. உயர்நீதிமன்றம் கருத்து
கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் ஜனவரி 13 முதல் 28 வரை அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி போராட்டங்கள் ஆகியவைகளுக்கு தடை விதித்தும், ஐந்து நாட்களுக்கு முன்பே அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து காயத்ரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ”சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு முறையற்ற போராட்டங்கள் மற்றும் அனுமதியற்ற பேரணிகளுக்கு தடை விதிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உள்ளது” என தெரிவித்தார். மேலும் கருத்துரிமை என்பது வரம்புக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இவ்வழக்கின் மீதான விசாரணையை நாளை மறு நாள் ஒத்திவைத்தார்.