செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (21:37 IST)

ஓபிஎஸ் மகன் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை! ஈவிகேஎஸ் இளங்கோவன்

எம்பி ஆகாமலேயே எம்பி என கல்வெட்டில் போட்டு கொள்வது ஒரு கிரிமினல் குற்றம் என்றும் உடனடியாக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் மீது கிரிமினல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பிரமுகரும், தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
தேனி அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவில் வைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியின் எம்பி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளதை அனைத்து தரப்பினர்களும் கண்டித்துள்ள நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:
 
எம்பிபிஎஸ் படிக்காமலே டாக்டர் என்று போட்டுக்கொண்டு பிராடு செய்வது போன்ற குற்றத்திற்கு இணையானது இந்த குற்றம். எனவே தமிழ்நாடு போலீஸ் இதுகுறித்து உடனடியாக ஓபிஎஸ் மகன் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து அதற்குரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும். ஒரு துணை முதல்வரின் மகன் என்பதற்காக அவர் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதை ஒரு ஜனநாயக நாட்டில் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் தேனி கோவிலில் ரவீந்தரநாத் எம்பி என பொறிக்கப்பட்ட கல்வெட்டு பற்றி எனக்கு தெரியாது என முதல்வர் பழனிசாமி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்