செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (13:25 IST)

500 கொடுத்தால் வாங்காதீர்கள்; 5000 கேளுங்கள் – ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சைப் பேச்சு !

தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரச்சாரத்தின் போது சர்ச்சையான கருத்துகளை பேசியுள்ளார்.

தேனி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஓபி ரவிந்தரநாத் மற்றும் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ஒ.பி. ரவீந்தரநாத் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள பெரும்பாண்மை சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களாக உள்ளனர். இதனால் காங்கிரஸ் வேட்பாளருக்கு அங்கு வெற்றி வாய்ப்பு குறைவு என சொல்லப்பட்டு வருகிறது. தனது பலத்தைக் கூட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தேனிக்கு வரும் 12 ஆம் தேதி அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார் ஈவிகேஎஸ்.

அதுமட்டுமில்லாமல் குடும்ப சகிதமாக தேனியில் முகாமிட்டு வாக்கு வேட்டையி ஈடுபட்டு வருகிறார். நேற்று உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் ‘தேனியில் ஆளும் கட்சியினர் வாக்குக்கு 500 ரூபாய் கொடுக்கிறார்கள். அவர்கள் 500 ரூபாய் கொடுத்தால் வாங்காதீர்கள். 5000 ரூபாய் கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் பணம் உங்கள் பணம். அவர்கள் உழைத்து சம்பாதித்தது அல்ல. பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நாமம் போட்டுக்கொண்டு என்னை வெற்றி பெற செய்யுங்கள்.  உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்தையும் நான் உடனடியாக செய்து கொடுப்பேன்’ எனப் பேசினார்.

வாக்குக்கு காசு வாங்கி கொள்ளுங்கள் என மக்களிடம் கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.