1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2018 (20:30 IST)

தினகரன் அணி அரசியல் கட்சியே கிடையாது: தேர்தல் ஆணையம் பொளேர்!

தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியே கிடையாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தாக்கல் செய்த மனுவில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
 
ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. சசிகலா சிறைக்கு சென்று எடப்பாடி முதல்வரானதும் அந்த அணி எடப்பாடி அணியாக மாறியது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையம் இரட்டை இலையையும், அதிமுக என்ற பெயரையும் முடக்கியது.
 
சசிகலா, எடப்பாடி தினகரன் அடங்கிய அணியை அதிமுக அம்மா அணி எனவும், ஓபிஎஸ் அணியை அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி எனவும் அழைக்க உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில் தினகரன் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-உடன் இணைந்து அதிமுகவையும், இரட்டை இலையையும் பெற்றார்.
 
இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்தார். அதில், தேர்தல் ஆணையம் அதிமுக ஓபிஎஸ் தரப்புக்கு சொந்தம் என கூறியதை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி மேலும் ஒரு மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் தினகரன்.
 
அதில், அதிமுக யாருக்கு சொந்தம் என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்கள் அணி அதிமுக அம்மா அணி என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பான விளக்கத்தை கேட்டு இந்திய தேர்தல் ஆணையம், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியது.
 
இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இதில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது. தினகரன் அணிக்கு கட்சி பெயரை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது. தினகரன் அணியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தினகரன் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.