சமகவுக்கு பொது சின்னம் கிடையாது; தேர்தல் ஆணையம் திட்டவட்டம்! – குழப்பத்தில் சரத்குமார்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சிக்கு பொதுசின்னம் கிடையாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. சமக 37 இடங்களில் போட்டியிட உள்ள நிலையில் தங்களுக்கு தனிச்சின்னம் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் சரத்குமார் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் சரத்குமாரின் கோரிக்கை மனுவை நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம் தனி தேர்தல் சின்னம் கிடையாது என தெரிவித்துள்ளது. இதனால் 37 தொகுதிகளிலும் சமக சுயேட்சையாக தொகுதிக்கு ஒரு சின்னம் என போட்டியிட வேண்டிய நிலை உள்ளதால் சமகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் கூட்டணியில் உள்ள மநீமவின் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற வாய்ப்பும் உள்ள நிலையில் சமகவின் முடிவு குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.