திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (16:43 IST)

அடுத்த முதல்வர் யார்? ரஜினி பேச்சுக்கு இமிடியட் ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடியார்!

2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடி பேட்டி அளித்துள்ளார். 
 
கோவாவில் இருந்து விருது விழாவை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கமல் உடனான கூட்டணி குறித்தும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார், 
 
நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள்தான் காரணம். அவர்களுக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன். கமலுடனான் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் தான் முடிவெடுக்க வேண்டும். அப்படி கூட்டணி அமைந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பது அப்போதைய சூழ்நிலையை பொருத்து கட்சி நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள். எனவே அதைப்பற்றி நான் இப்போது கூற முடியாது.  
2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிசயத்தை, அற்புதத்தை தமிழக மக்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் அரசியலில் நிகழ்த்துவார்கள் என தன்னுடைய டிரேட் மார்க் சிரிப்போடு கூறிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டார் ரஜினிகாந்த். 
 
இந்நிலையில் இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் கூறியதாவது, எந்த அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை. ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும். 
 
ஒருவேளை 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம். ஆம், 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.