லீவ் லெட்டரில் உண்மையை கூறிய மாணவனுக்கு பாராட்டு..
விடுப்பு கடிதத்தில் உண்மை காரணத்தை எழுதிய பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பள்ளிகளில் விடுப்பு எடுப்பதற்காக விடுப்பு கடிதத்தில் காய்ச்சல், பாட்டி இறந்துவிட்டார் என பரவலாக ஒரே காரணத்தை தான் பல மாணவர்கள் எழுதுவார்கள். ஆனால் திருவாரூர் மாவட்டம் ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தீபக், தனது விடுப்பு கடிதத்தில் உண்மை காரணத்தை எழுதியுள்ளார்.
அதாவது தனது விடுப்பு கடிதத்தில், “நேற்று இரவு முழுவதும் ஊரில் நடைபெற்ற கபடி போட்டியை கண் விழித்து பார்த்ததால் உடல் சோர்வாக உள்ளது.ஆதலால் ஒரு நாள் எனக்கு விடுப்பு வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இதனை படித்த ஆசிரியருக்கோ அதிர்ச்சி.
பொய் காரணத்தை கூறி விடுமுறை எடுக்கும் பல மாணவர்களுக்கு மத்தியில் உண்மை காரணத்தை கூறி விடுமுறை எடுத்த தீபக்கை ஆசிரியர் பாராட்டியுள்ளார். மேலும் அந்த விடுப்பு கடிதத்தை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார். ஆதலால் சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தீபக் பள்ளியில் சிறந்த மாணவன் எனவும், கடந்த காலாண்டு தேர்வில் 90% மதிப்பெண் வாங்கியுள்ளார் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.