நடந்தாய் வாழி காவிரி திட்டம் – மத்திய அரசிடம் நிதி உதவிக் கோரிய எடப்பாடி பழனிச்சாமி !
தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியினை உடனடியாக வழங்குமாறு பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று சென்னை ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார். அந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியவர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது பிரதம்ர் மோடியிடம் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிதியினை உடனடியாக வழங்கவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அப்போது ‘ தமிழகத்தின் வளர்ந்துவரும் தண்ணீர்த் தேவையைப் போக்கும் பொருட்டு காவிரி – கோதாவரி இணைப்பு, நடந்தாய் வாழி காவிரி திட்டம், ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
மேலும் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ள மானியமான ரூ.7,825.59 கோடியினை விரைந்து வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.