செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam

பாஜகவை நெருங்குகிறதா திமுக?

பாஜக மீது கடும் வெறுப்பை கடந்த சில ஆண்டுகளாக வெளிப்படுத்தி வந்த திமுக, கடந்த சில மாதங்களாக அடக்கி வாசித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
 
சமீபத்தில் ஒரே நாடு ஒரே மொழி என்ற இந்தி மொழி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய போது அதற்கு எதிராக போராட்டத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் திடீரென கவர்னரின் சந்திப்பிற்கு பின்னர் இந்த போராட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார் 
 
 
அதேபோல் ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவது, கருப்பு பலூன்களை பறக்கவிடுவது மற்றும் ’கோபேக் மோடி’ என்று கோஷம் இடுவது ஆகியவைகளை திமுகவினர் தீவிரமாக செய்து வருவது தெரிந்ததே. ஆனால் நேற்று பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது திமுக தலைமையும் சரி, பிரபல தலைவர்களும் சரி, திமுக தொண்டர்கள் மத்தியிலும் சரி எந்தவிதமான எதிர்ப்பையும் பிரதமருக்கு எதிராக காட்டவில்லை.
 
 
அதுமட்டுமின்றி சென்னையில் நேற்று பிரதமர் மோடி தமிழ் மொழியின் பெருமை குறித்து பேசியதை திமுக திடீரென பாராட்டியும் உள்ளது. திமுகவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால் அந்த கட்சி பாஜக பக்கம் சாய்கிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்கும் நிலையில் அதுவரை பாஜகவுக்கு எதிரான பெரிய போராட்டம் எதையும் திமுக செய்ய வாய்ப்பில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்