புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (20:44 IST)

மோடிக்கு எதிரான எதிர்ப்பு நீர்த்துப்போய்விட்டதா? திருமாவளவன் பதில்

பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்றாலே எதிர்க்கட்சி தலைவர்களும் தொண்டர்களும் வரிந்து கட்டிக்கொண்டு கருப்புக்கொடி காட்டுவதும், விமான நிலையத்தில் கோஷமிடுவதும், கருப்பு பலூனில் ‘கோபேக் மோடி’ என்று எழுதி பறக்கவிடுவதும், டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் செய்வதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்வுகளாக உள்ளது
 
 
ஆனால் இன்று பிரதமர் மோடி வந்தபோது டுவிட்டரில் ‘கோபேக் மோடி’ என்ற டிரெண்ட் ஆனதை தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்களும் பிரமுகர்களும் மோடிக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஊடகங்களும் பிரதமர் மோடி எதிர்ப்பு குறித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் காட்டவில்லை. இதனால் மோடிக்கு எதிரான எதிர்ப்பு அவ்வளவுதானா? என்ற கேள்வி எழுந்தது
 
 
இந்த நிலையில் இதுகுறித்து விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியபோது, ‘தீக்குச்சியை பற்ற வைக்கவில்லை என்பதால் அதில் உள்ள நெருப்பு அணைந்துபோய்விட்டது என்று கூற முடியாது. அதேபோல, தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக யாரும் வீதிக்கு வரவில்லை என்பதால் அவருக்கு எதிரான எதிர்ப்பு நீர்த்துப்போய்விட்டது என்றும் சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளார்.
 
 
பிரதமர் மோடி வரும்போது எதிர்ப்புக்குரல் கொடுக்கும் ஒருசில திரையுலகினர்களும் இம்முறை அமைதியாக இருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது