1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (17:31 IST)

கருணாநிதியின் கடைசி ஆசை : அடம் பிடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி?

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள சூழ்நிலையில், திமுகவின் கோரிக்கையை ஏற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடம் பிடித்து வருவதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

 
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 12வது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  நேற்று காலை அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.  அவரது முக்கிய உடல் உறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பது சவாலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டியுள்ளது என மருத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
மருத்துவமனையில் ஸ்டாலின், கனிமொழி, அழகிரி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரும், மருத்துவமனைக்கு வெளியே ஏராளமான திமுக தொண்டர்களும் கூடியுள்ளனர். எழுந்து வா தலைவா என அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். ஆனாலும், கருணாநிதியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக்கூறப்படுகிறது. அந்நிலையில், நேற்று இரவு துரைமுருகன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க போவதாய் செய்திகள் வெளியானது. 
 
அதாவது கலைஞர் கருணாநிதி மிகவும் நேசித்தவர் அறிஞர் அண்ணா. எனவே, தன்னுடைய உடலை அவரின் சமாதிக்கு அருகிலேயே புதைக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் கடைசி ஆசையாக இருந்தது. இதை அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். எனவே, மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா சமாதிக்கு அருகிலேயே கருணாநிதியின் சமாதி அமைய வேண்டும் என்பது கருணாநிதி குடும்பத்தினரின் கோரிக்கையாக இருக்கிறது.

 
நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகிய மூன்று பேரும் ஆகியோர் சந்தித்து இதுபற்றி கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், பிடி கொடுக்காத அவர், சட்டத்தில் இடம் இருந்தால் பார்க்கலம் எனக் கூறி அனுப்பி வைத்தாராம். எனவே, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரிடம் முறையிட்ட அவர்கள் இதுபற்றி முதல்வரிடம் பேசுங்கள் எனக்கூறியுள்ளனர். 
 
ஆனால், அவர்கள் கூறியும் எடப்பாடி மறுத்துவிட்டாராம். அவர்கள் மூவரும் சேர்ந்து அமைச்சர் செங்கோட்டையனிடம் தகவல் கூறியுள்ளனர். கொங்கு மண்டத்தில் கோலோச்சியதில் பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் சீனியர். இதுவரை பழனிச்சாமியிடம் எந்த கோரிக்கைக்காகவும் செல்லாத அவர், முதல்வரின் வீட்டிற்கு நேரில் சென்று இதற்கு சம்மதிக்குமாறு கூறினாராம். ஆனாலும், இதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
 
இந்த தகவல் கனிமொழிக்கு தெரியவர நேரிடையாக தொலைப்பேசி மூலம் பிரதமர் மோடியிடம் அவர் பேச, இதுபற்றி நாங்கள் அவரிடம் பேசுகிறோம் என மோடி உறுதியளித்தாராம். ஆனாலும், முதல்வர் தரப்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் வராதால் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் இன்று மாலை ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகிய மூவரும் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் சந்தித்து இதுபற்றி பேசியதாக கூறப்படுகிறது.
 
இப்படியெல்லாம் முரண்டு பிடிக்கும் நபர் எடப்பாடி பழனிச்சாமி கிடையாது. இதற்கு பின்னால் பாஜகவே இருக்கிறது. அவர்கள் இருபக்கமும் மாறி  மாறி விளையாடுகிறார்கள் என ஸ்டாலின் கருதுகிறாராம். 
 
மேலும், மெரினா கடற்கரைக்கு பதிலாக கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடம் அருகே இடம் கொடுக்கிறோம் என எடப்பாடி கூறி வருவதாகவும், இதுபற்றிய பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி திமுக தொண்டர்களுக்கும், திமுக விசுவாசிகளுக்கும் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.