கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்? - அதிர்ச்சியில் தொண்டர்கள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதை காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசும் உறுதி செய்ய திமுக தொண்டர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு கூடினர். அதோடு, ஸ்டாலின், கனிமொழி, தாயாளு அம்மா, அழகிரி, தமிழரசு உள்ளிட்டோர் மருத்துவமனையில் ஒன்று கூட திமுக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின் நேற்று மாலை கருணாநிதியின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனை, அவரது உடலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது முக்கிய உடல் உறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பது சவாலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கருணாநிதியின் உடல் நிலையை கண்காணிக்க வேண்டியுள்ளது என கூறப்பட்டிருந்தது.
இது, கருணாநிதி நலம் பெற்று வருவார் என காத்திருந்த திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, ‘எழுந்து வா தலைவா’ என்கிற முழக்கத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். இன்று காலை ஸ்டாலின், கனிமொழி, அழகிரி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் மீண்டும் மருத்துவமனையில் கூடியுள்ளனர்.
நேற்று இரவு முழுவதும் பல திமுக தொண்டர்கள் மருத்துவமனை வாசலிலேயே தங்கியிருந்தனர். இன்று காலை மீண்டும் பல தொண்டர்கள் மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து அடுத்த மருத்துவ அறிக்கை எதுவும் இன்னும் வெளியாகவில்லை. கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவமனை முன்பு கூடியிருக்கும் திமுக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.