ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (15:05 IST)

முதுமை மற்றும் நோய் - வெல்ல போராடும் கருணாநிதி: இயக்குவது எது?

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் அவரை முக்கியப் பிரமுகர்கள் வந்து சந்திப்பதும் சமீப நாட்களில் பெரும் செய்தியாகியுள்ளது. 94 வயது முடிந்து 95ஆம் வயதைக் கடந்துகொண்டிருக்கும் கருணாநிதி்யின் உடல்நிலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும்இன்றளவும் அவருக்கு இருக்கும் உடல் வலிமை குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் பல எழுந்துள்ளன.



ஆயுளை முடிவு செய்யும் காரணிகள்

மூத்த மருத்துவரும் தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான அமலோற்பவநாதன், ஒருவர் நீண்ட நாள் உடல் நலத்துடன் வாழ்வதை முடிவு செய்யும் காரணிகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அவர் தெரிவித்த தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.

ஒருவரின் ஆயுள் காலத்தை முடிவு செய்யும் முதல் காரணி அவரது மரபணு. ஒருவரது பெற்றோர், முன்னோர்கள் உள்ளிட்டவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றிருந்தால் அந்த நபரும் அதிக ஆண்டுகள் வாழ்வதற்கான சாத்தியம் அதிகம்.

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஒருவர் முதுமையை நெருங்க நெருங்க கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும். அந்த இரு நோய்களும் இல்லாமல் போனாலே உறுப்புகள் சிறப்பாகச் செயல்பட்டு நீண்ட ஆண்டுகள் வாழலாம்.

புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபானம் உட்கொள்ளும் பழக்கம் இல்லாவிட்டால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் எதுவும் வராமல் நீண்ட நாட்கள் வாழ முடியும்.


ஒருவரின் ஆயுளைத் தீர்மானிப்பதில் அவரது உணவுப் பழக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது. 50, 60 வயதைக் கடந்த பின் கருணாநிதி தனது உணவுத் தெரிவுகளில் மிகவும் கவனமாக இருந்தார். முதுமைப் பருவத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்வது உடலில் உண்டாகும் பிரச்சனைகளைத் தவிர்க்கும்.




தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கமும் ஒருவரது உடல்நலத்தை மேம்படுத்தி ஆயுளை நீளச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடைசியாக, ஒருவருக்கு உடல்நலக் குறைபாடு உண்டானால், தேவைப்படும் நேரத்தில், தேவைப்படும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். அத்தகைய மருத்துவ வசதி ஒரு நோயாளிக்கு தக்க சமயத்தில் கிடைக்காவிட்டால் அவரைக் காப்பாற்றுவது கடினம்தான்.

'சவாலான காரியம்'

'வயது முதிர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன?' என்ற கேள்விக்கு பதிலளித்த அமலோற்பவநாதன், முதியவர்களின் உடல் வலுவிழந்து (fragile) இருக்கும் என்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது ஆரம்பம் முதலே சவாலான காரியம்தான் என்கிறார்.




"அவர்களின் உடலில் புரதத்தின் அளவு குறைவாக இருக்கும் என்பதால், தசைகள் வலுவாக இருக்காது. நோயில் இருந்து மீண்டு வரும் சமயத்தில் ஏதாவது கிருமித் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். படுத்தே இருப்பதால் தோலில் புண் (bedsore), நுரையீரல் அழற்சி (Pneumonia) உண்டாக வாய்ப்புண்டு. இவற்றையெல்லாம் தவிர்க்க மருத்துவர்கள் போராட வேண்டும்," என்று கூறும் அமலோற்பவநாதன் அவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் அளவிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது என்றார்.

முதுமை - இன்னொரு குழந்தைப் பருவம்

முதுமைப் பருவம் என்பது இன்னொரு குழந்தைப் பருவம் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய ஊட்டச்சத்து நிபுணரான மருத்துவர் ஹேமமாலினி.



"25 வயதைக் கடந்த பின்பு மனித உடலின் 'பேசல் மெட்டபாலிக் ரேட்' அதாவது அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் (BMR) ஒரு தசாப்தத்துக்கு 10 சதவிகிதம் வீதம் குறையும். மனித உடல் உறங்கும்போதும், ஓய்வில் இருக்கும்போதும் கூட உள்ளுறுப்புகள் இயங்கச் செலவிடப்படும் சக்தியே அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் ஆகும். அதனால்தான் முதுமை வரும்போது மாடிப்படி ஏறுதல் போன்று இளமையில் எளிதாகச் செய்த செயல்களை, அதே வேகத்துடன் செய்ய முடிவதில்லை."

"அத்துடன் முதியவர்கள் உடலில் தசையின் அளவு குறைந்து, கொழுப்பு அதிகரிக்கும். அதை ஈடுகட்ட அதிக புரதச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், முதியவரக்ளுக்கு செரிமானம் ஆகும் திறன் குறைவு என்பதால் எளிதில் செரிக்கக் கூடிய புரத உணவுகளை வழங்க வேண்டும். இறைச்சி போன்றவற்றைத் தவிர்த்து பருப்பு, பால் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்."

"அதேபோல முதுமையில் சுவைகளை உணர்தல், தாகம் எடுக்கும் உணர்வு போன்றவை குறையும். அதனால், நீர் அருந்தாமல் இருந்துவிடவும் வாய்ப்புண்டு. அதற்காக முதியவர்கள் அவ்வப்போது நீர், பழச்சாறு போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்."

"முதுமையில் குறையும் எலும்பு வலிமைக்கு ஈடுகட்ட கேல்சியம் உணவுகள், எளிதில் செரிக்க நார்ச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின்கள் ஆகியவற்றைக் கொண்ட உணவுகளும் சரியான விகிதத்தில் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்," என்று கூறும் ஹேமமாலினி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரடியாக சில நேரங்களில் உண்ண முடியாதபோதும், குழாய் மூலம் சத்துமாவுக் கூழ், பால், சூப், பழச்சாறு போன்றவை வழங்கப்படும் என்கிறார்.

அரசியல்வாதிகளும் மன வலிமையும்

மன நல மருத்துவர் அசோகன் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். "மனிதர்களில் அறிவு நுட்பம் வாய்ந்த குழுக்களில் அரசியல்வாதிகளும் அடங்குவர். காரணம் ஒரே வாக்குறுதியை ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒரு முறை மக்களிடம் சொல்லி, அவர்களின் நம்பிக்கையை சம்பாதித்து தேர்தலை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. அதற்காக அவர்கள் பல அவமானங்களைச் சந்தித்து இருப்பார்கள். நிறைய தோல்விகளை சந்தித்து இருப்பார்கள். அந்த அனுபவங்களால் அவர்கள் பிற சமூகக் குழுக்களைவிடவும் மன உறுதி மிக்கவர்களாகவும், போராடும் தன்மை உடையவர்களாகவும் இருப்பார்கள்," என்கிறார் அவர்.

மேற்கொண்டு பேசிய அசோகன், "அதிகம் விளையாட அனுமதிக்கப்படாத குழந்தைகள் மண்ணில் உள்ள கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாக்காமலே போவதால், அவர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு வலிமை அடையாமலே இருந்துவிடும். திடீரென அவர்கள் ஒரு நாள் வீட்டு உணவைத் தவிர்த்து, வெளியில் உண்ணும்போது வரும் சிறு உடல்நலப் பிரச்சனையைக்கூட அவர்கள் உடலால் தாங்கிக்கொள்ள முடியாது. 'கான்செப்ட் ஆஃப் அல்டெர்னேடிவ்' (Concept of Alternative) என்பது அவர்கள் வாழ்வில் இல்லாமல் போவதே இதற்குக் காரணம். நமக்கு பழக்கப்பட்ட ஒன்றை நம் வாழ்வில் இழந்தாலும், நம் முன் இருக்கும் மாற்றுத் தெரிவுகளை நாம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்."

அப்படி தங்கள் இளம் வயது முதலே மாற்றுத் தெரிவுகளுக்கும் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்பவர்களால் முதுமையில் உடல் தளர்ந்து, பார்வை மங்கி, செவித்திறன் குறைந்துவிடும் சமயத்திலும், அவற்றை எதிர்கொண்டு மீண்டும் பழைய நிலைக்கே வரும் தன்மை (Resilience) இருக்கும். தேர்தல்களில் அடிக்கடி வெற்றி தோல்விகளுக்கு பழக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அந்த உளவியல் தன்மை இருக்கும்," என்கிறார் அவர்.

யோகா எவ்வாறு உதவும்?

கருணாநிதி பல ஆண்டுகள் தொடர்ந்து யோகாசனப் பயிற்சி செய்து வந்தவர் என்பது பரவலாக அறியப்பட்ட செய்தி.

சென்னை மற்றும் ரிஷிகேஷில் யோகாசன பயிற்சி அளிக்கும் பாஸ்கரன் முதுமையில் யோகா எவ்வாறு உதவும் என்று பிபிசி தமிழிடம் கூறினார்.



இளம் வயதில் இருந்தே ஒருவர் யோகா பயிற்சி செய்யவிட்டாலும், அவர் தன் 60ஆம் வயதில் பயிற்சி செய்யத் தொடங்கினாலும் 70 வயதுக்கு மேல் அவருக்கு ஒரு உடல் நலக் குறைபாடு வருமானால், அவர் கடந்த சில ஆண்டுகளாக செய்த பயிற்சியால் கிடைத்த வலிமை, மீண்டு வர உதவும். நாளொன்றுக்கு 15 - 20 நிமிடங்கள் செய்தாலே போதும்," என்கிறார் பாஸ்கரன்.

"யோகா மூலம் கிடைக்கும் நன்மை என்பது வங்கியில் பணத்தை சேமித்து வைப்பதைப் போன்றதுதான். அது கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டே இருக்கும். நமக்கு முடியாத பட்சத்தில் அந்தச் சேமிப்பு உதவியாக இருக்கும்," என்பது அவரது கருத்து.