வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 2 மே 2024 (13:00 IST)

சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ்..! வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!

E Pass
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் கோடை விடுமுறை காலத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, கொரோனா காலத்தைப் போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், கொடைக்கானல், ஊட்டிக்கு செல்லும் பயணிகளுக்கு வரும் மே 7ம் தேதி முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விடுமுறை காலம் என்பதால் ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகன நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு இடைஞ்சல் காரணமாக கொரோனா காலத்தில் இருந்தது போன்ற இ – பாஸ் நடைமுறையை வகுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 
 
இ-பாஸ் நடைமுறைக்காக தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் பிரத்யேக இணையதளம் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயர், ஆதார் எண், சொந்த வாகன எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பித்து இ-பாஸை டவுன்லோடு செய்துகொள்ள கூடிய வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

 
தற்போது, இ-பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்களுக்கு அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் என்ன? உள்ளூர் வாகன விதிவிலக்கு எப்படி? போன்ற விவரங்கள் வழிகாட்டு நெறிமுறையில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.