செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் திடீர் சோதனை.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி...
கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
தவெக ஆட்சி அமைந்திருக்கும் இன்றைய அரசியல் சூழலில், சட்டப்பேரவை தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜா கொடுத்த பரபரப்பு புகாரை அடுத்தே இந்த அதிரடி ரெய்டு நடத்தப்படுகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் முன்ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் நிலையில், அவரது ஆதரவாளர்களான அதிபன் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அவரது பெற்றோர் இருக்கும் பகுதி மற்றும் மண்மங்கலம் பூர்வீக வீடு ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கியுள்ளனர்.
மேலும், செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணியன் வீடு, திமுக நிர்வாகி கோயம்பள்ளி பாஸ்கரன் வீடு மற்றும் நரிக்கட்டியூரில் உள்ள டாஸ்மாக் குடோன் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நீடித்து வருகிறது. சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த திடீர் ரெய்டு நடவடிக்கை திமுக வட்டாரத்திலும், ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலும் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
