1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (20:28 IST)

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

ஜெயலலிதா இருந்திருந்தால் காவிரி பிரச்சினைக்கு எப்படி நிரந்தர தீர்வு கொடுத்தாரோ, அதுபோல நீட் தேர்வு விவகாரத்திலும் நிரந்தர தீர்வை பெற்றுத் தந்திருப்பார் என்றும் நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
 
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில்  சசிகலா இன்று தொண்டர்களை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90 சதவிதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
 
திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் இதுவரை சரிவர பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும் கடந்த 2 மாதமாக ரேஷன் விநியோகம் மிகவும் மோசமாக உள்ளது என்றும் சசிகலா குற்றம் சாட்டினார். தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் நல்ல முடிவை தர வேண்டும் என தெரிவித்த அவர்,  கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை மீதும், அது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த பதில் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டார். 
 
ஜெயலலிதா இருந்திருந்தால் காவிரி பிரச்சினைக்கு எப்படி நிரந்தர தீர்வு கொடுத்தாரோ, அதுபோல நீட் தேர்வு விவகாரத்திலும் நிரந்தர தீர்வை பெற்றுத் தந்திருப்பார் என்று சசிகலா தெரிவித்தார். மேலும் நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம் என்றும் விமர்சித்தார். 


திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, திமுகவினர் மக்களையும் வாக்களிப்பவர்களையும் பிச்சைக்காரர்களாகத் தான் நினைக்கிறார்கள் என தெரிவித்தார்.