திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (16:05 IST)

பாஜக ஆளும் மாநிலங்களில் நீட் முறைகேடு.! மௌனம் காக்கும் மோடி.! விளாசிய ராகுல் காந்தி..!

Rahul Gandhi
நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
 
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல், நீட் தேர்வு ஊழலால் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழக்கம் போல் மவுனம் சாதிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
 
பிஹார், குஜராத், ஹரியாணா மாநிலங்களில் நடந்துள்ள கைதுகள், நீட் தேர்வு செயல்பாட்டில் திட்டமிட்ட ஊழல் நடந்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் பாஜக ஆளும் இந்த மாநிலங்கள்தான் வினாத்தாள் கசிவின் மையமாக மாறியுள்ளன என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வினாத்தாள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் அதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

 
எதிர்க்கட்சி என்ற வகையில் தங்களது பொறுப்பை நிறைவேற்றி, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களின் குரல்களை தெருக்களில் இருந்து நாடாளுமன்றம் வரை வலுவாக எழுப்பவும், வினாத்தாள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்களை உருவாக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் காங்கிரஸ் உறுதி கொண்டுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.