1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 3 ஜூலை 2024 (16:02 IST)

கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்.! பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு..!!

Cricket Team
டி20 உலகக் கோப்பை டிராபியுடன் இந்திய வீரர்கள் விமானத்தில் புறப்பட்டனர். நாளை காலை டெல்லி வரும் அவர்கள், முதலில் பிரதமர் மோடி சந்திக்க உள்ளனர்.
 
பார்படாஸில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக கோப்பையை வென்று சரித்திரத்தில் இடம் பிடித்தது. 
 
இந்தியாவிற்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவு ஊழியர்கள், தென் ஆப்பிரிக்கா வீரர்களின் குடும்பத்தினர் என்று அனைவரும் நாடு திரும்பிவிட்டனர். ஆனால், இந்திய அணி வீரர்களால்  நாடு திரும்பமுடியவில்லை. கோப்பையை வென்ற மகிழ்ச்சியை கொண்டாடிய நிலையில் பார்படாஸில் பெரில் சூறாவளி புயல் தாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்து சேவையும் தடை செய்யப்பட்டது. 
 
ஹோட்டல்களில் பணியாளர்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது. இது போன்ற பல பிரச்சனைகளை இந்திய அணி வீரர்கள் எதிர்கொண்டனர். இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலமாக பார்படாஸிலிருந்து அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி ஏர் இந்தியா விமானமும் பார்படாஸிற்கு வந்துள்ளது. இதையடுத்து  இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் விமானத்தில் புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் மட்டுமின்றி இந்திய பத்திரிக்கையாளர்களும் விமானம் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 
நாளை காலை டெல்லி வரும் இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கின்றனர். அதன் பிறகு வரும் 5 ஆம் தேதி மும்பை முழுவதும் டி20 உலகக் கோப்பை கோப்பையுடன் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக செல்ல இருக்கின்றனர்.