செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (12:13 IST)

கவிழ்த்துவிட்ட இடைத்தேர்தல்: வெளியில் தலைக்காட்டாத திமுக தலைகள்!!

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை திமுகவிற்கு நல்ல பலனை கொடுக்காததால் திமுக தலைவர்கள் இதுவரை பேட்டி எதுவும் கொடுக்காமல் அமைதி காத்து வருகின்றனர். 
 
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் என்ற தொகுதியிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.  
 
இதில் வாக்கு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணி நேரத்தில் புதுவை காமராஜ் தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆம், காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14782 வாக்குகளை பெற்று 7171 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை தோற்கடுத்து வெற்றி பெற்றுள்ளார்.   
ஒரு தொகுதிக்கான முடிவு வெளியான நிலையில் விக்கிரவாண்டு மற்றும் நாங்குநேரி தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது இரு தொகுதிகளிலும் அதிமுகவே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 
 
நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன்  14,266 வாக்கு வித்தியாசத்திலும், விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 29,591 வாக்கு வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் திமுக  வேட்பாளர்கள் பின்னடவை சந்தித்துள்ளனர்.  
அதிமுக முன்னிலையில் உள்ளதாக அதிமுக தொண்டர்கள் இனிப்பு கொடுத்து, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதேபோல, அதிமுக முக்கிய தலைவர்களான ஓபிஎஸ், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் மீடியா முன் தோன்றி தங்களது வெற்றி குறித்து பேசி வருகின்றனர். 
 
ஆனால், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளதால் தலைவர்கள் யாரும் காலை முதல் மீடியாவில் தோன்றவில்லை. திமுக தொண்டர்களும் வருத்ததுடன் காணப்பட்டுள்ளனர்.