திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (16:00 IST)

திமுக பொய் கூறினால் இனியும் செல்லுபடியாகாது- அண்ணாமலை

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், சட்டசபையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் பாரம்பரியமான, மீண்டும் மீண்டும் பொய் கூறினால் உண்மை என்று மக்கள் நம்பி விடுவார்கள் என்பது இனியும் செல்லுபடியாகாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அண்ணாமலை தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தொடர்ந்து பொய் கூறி வந்தார் அன்றைய நிதியமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள். அதே பாணியில், தற்போது சட்டசபையில் பொய் கூறிக் கொண்டிருக்கிறார் தற்போதைய நிதியமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள். அவருக்கு உண்மையை எடுத்துக் கூறுவது நமது கடமை.

2014 முதல் 2022 வரை, மத்திய அரசின் நேரடி வரி வருவாயில், தமிழகத்தின் பங்கு ரூபாய் 5.16 லட்சம் கோடி என்றும், மத்திய அரசு வழங்கிய வரிப் பங்கீடு ரூபாய் 2.08 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில், மத்திய அரசு வழங்கிய வரிப் பங்கீடு 2.46 லட்சம் கோடி ஆகும். அதனுடன், கடந்த ஒன்பது ஆண்டுகளில், மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய உதவித் தொகை, 2.30 லட்சம் கோடி. தமிழகத்தில் இருந்து கிடைத்ததாக அமைச்சர் கூறும் 5.16 லட்சம் கோடி வரி வருவாயில், நேரடி நிதியாகவே கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதி 4.77 லட்சம் கோடி ஆகும். அமைச்சர் கூறும் 2.08 லட்சம் கோடி ரூபாய் கணக்கை எப்படிக் கணக்கிட்டார் என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும். 2004 – 2014 பத்தாண்டு கால காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில், தமிழகத்துக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீடு மற்றும் உதவித் தொகை, வெறும் 1.5 லட்சம் கோடிதான் என்பதை, தமிழக நிதியமைச்சர் திரு தங்கம் தென்னரசுவுக்கு நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன். காங்கிரஸ் திமுக ஆட்சிக் காலத்தை விட, மூன்று மடங்கு அதிகமாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் தமிழகத்துக்கு நேரடி நிதியாக வழங்கியுள்ளார்.

இது மட்டுமல்லாமல், நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்து, துறைமுகங்கள், மருத்துவக் கல்லூரிகள், உள்ளிட்ட தமிழக உட்கட்டமைப்பு மேம்பாடுக்காகவும், மாநில அரசின் தலையீடு இல்லாமல், மத்திய அரசு நேரடியாக வழங்கும் நலத் திட்டங்கள், மானிய விலையில் ரேஷன் அரிசி என கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள திட்டங்கள் மற்றும் நிதி பங்கீட்டின் மதிப்பு, ரூபாய் 10.76 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். இது, தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.

மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கும் வரிப் பங்கீடு, மற்றும் திட்டங்களின் மதிப்பு, தமிழகத்தின் நேரடி வரிப் பங்களிப்பை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருக்கும்போது, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், சட்டசபையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் பாரம்பரியமான, மீண்டும் மீண்டும் பொய் கூறினால் உண்மை என்று மக்கள் நம்பி விடுவார்கள் என்பது இனியும் செல்லுபடியாகாது. கூரையின் மீதேறி சேவல் கூவுவதால் சூரியன் உதிப்பதில்லை என்பதை மக்கள் உணர்வார்கள் அதை நிதி அமைச்சரும் உணர்வார் என்று நம்புகின்றேன்''என்று தெரிவித்துள்ளார்.