வெள்ளத்தில் தத்தளிக்க விரும்பவில்லை... அதிமுகவில் இருந்து கழன்ற முன்னாள் எம்பி பேச்சு!
தமிழகத்தில் வலுவான அரசு வலிமையான தலைமையின் கீழ் அமைய வேண்டும் என்பதால் திமுகவில் இணைந்து உள்ளேன் என லக்ஷ்மணன் பேச்சு.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரமுகர்களின் கட்சி தாவல்கள், பிரமுகர்களின் அறிக்கைகள் என தமிழக அரசியல் வட்டாரமே பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி ஒருவர் ஏற்கனவே திமுகவில் இணைந்த நிலையில் மற்றோரு அதிமுக பிரமுகரும் திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் எம்பியாக இருந்தவரும் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு அணிகளாக அதிமுக இருந்தபோது, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவருமான லக்ஷ்மணன் என்பவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன் திமுகவில் இணைந்தார்.
இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை முன்னாள் எம்பி லக்ஷ்மணன், தமிழகத்தில் வலுவான அரசு வலிமையான தலைமையின் கீழ் அமைய வேண்டும் என்பதால் திமுகவில் இணைந்து உள்ளேன்.
மேலும், கொரானா காலகட்டத்தில் யார் முதலமைச்சர் என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கக் கூடிய அதிமுக ஆட்சியை விட மக்களுக்கு கொரோனா காலத்திலும் உதவி புரிந்து மக்களின் கண்ணீரைத் துடைத்து வரும் திமுக கட்சியில் இணைந்து உள்ளேன். அதிமுக அரசு பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
காட்டாற்று வெள்ளம் போல் நடைபெற்று வரும் இந்த ஆட்சியில் நாங்கள் தத்தளிக்க விரும்பவில்லை. எனவேதான் திமுகவில் இணைந்துள்ளேன். வரும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியாரை இல்லை இல்லை ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக பாடுபடுவோம் என்று பேசினார்.