ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (11:37 IST)

ஸ்டெர்லைட் தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி! – கனிமொழி, வைகோ கருத்து

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான மேல்முறையீடு மீது உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று வைகோ, கனிமொழி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு விதித்த தடை தொடரும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பேசியுள்ள தூத்துக்குடி எம்பி கனிமொழி “தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.” என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறுகையில் ”ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கிடைத்த வெற்றி” என்று கூறியுள்ளார்.