மார்ச் 3 முதல் தேமுதிக வேட்பாளர் நேர்காணல்! – தனித்து களமிறங்குகிறதா தேமுதிக?
மார்ச் 3 முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுவதாக தேமுதிக அறிவித்துள்ள நிலையில் தேமுதிக தேர்தலை தனியாக சந்திக்க உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசாமல் இருந்து வந்த அதிமுக இன்று அமைச்சர் தங்கமணி தலைமையில் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட இருந்தது.
இந்நிலையில் அதிமுகவில் தேமுதிகவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என கருதிய தேமுதிகவினர் அமைச்சர் தங்கமணியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தவிர்த்துள்ளனர்.
இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரேமலதா விஜயகாந்த். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதன்படி மார்ச் 3 முதல் 8ம் தேதி வரை தேமுதிக வேட்பாளர் நேர்காணல் மாவட்ட வாரியாக நடைபெறும் என அறிவித்துள்ளார்.
முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் முன்னதாகவே கூட்டம் ஒன்றில் பேசியிருந்த பிரேமலதா விஜயகாந்த் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிடும் அளவிற்கு தேமுதிகவிற்கு வலு உள்ளது என பேசியிருந்த நிலையில் தற்போது வேட்பாளர் நேர்காணல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.