இப்போதாவது ஒரு எம்.பி சீட் குடுங்க! வெயிட்டிங் லிஸ்டில் தேமுதிக!
மத்திய அரசின் ராஜ்யசபாவில் 55 எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவதையடுத்து நடைபெற இருக்கும் தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்குமா என காத்திருக்கிறது தேமுதிக.
ராஜ்யசபா பதவிகாலம் முடியும் எம்.பிக்களில் தமிழகத்தின் ஆறு எம்.பிக்களும் அடக்கம். அதிமுக சார்பில் ராஜ்யசபா சென்ற சசிகலா புஷ்பா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சியான பாமகவுக்கு ராஜ்யசபா எம்.பி சீட் ஒன்றை ஒதுக்கியது அதிமுக. அதன்படி அன்புமணி ராமதாஸ் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தேமுதிகவும் தங்களுக்கு ஒரு எம்.பி சீட் தர வேண்டுமென கேட்டு வந்தது. ஆனால் மக்களவை தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு எம்.பி சீட் தரப்படவில்லை. இதனால் அப்செட்டில் இருந்த தேமுதிக தற்போது காலியாகும் எம்.பி சீட்டில் ஒன்று தங்களுக்கு வேண்டும் என அதிமுகவிடம் பேசி வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் “மக்களவை தேர்தலின்போதே ராஜ்யசபா எம்.பி சீட் குறித்து பேசியிருக்கிறோம். தற்போது என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை காண காத்திருக்கிறோம்” என கூறியுள்ளார்.
ஏற்கனவே பல மேடைகளில் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தர்மத்தின்படி நடந்து கொள்ளுங்கள் என மறைமுகமாக அதிமுகவை பேசி வந்திருக்கிறார். இந்நிலையில் தற்போது ராஜ்யசபா எம்.பி சீட் கிடைக்கவில்லை என்றால் தேமுதிக கூட்டணியிலிருந்து விலக முடிவெடுக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.