அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது உருவான அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட திசையில் நகர்ந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவாகும் என கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.