வன்னியர் வாக்குகளைக் குறிவைத்த திமுக… காப்பாற்றிய தலித் வாக்குகள் – திமுகவுக்கு விக்ரவாண்டி சொல்லும் பாடம் !
விக்கிரவாண்டித் தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெறலாம் என திட்டம்போட்ட திமுகவைத் தலித் வாக்குகள்தான் கௌரவமானத் தோல்வியைப் பெற உதவியுள்ளனர்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது விவாவதங்களை எழுப்பியுள்ளது. அதிலும் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். வன்னியர்கள் மற்றும் தலித் வாக்குகள் பெருவாரியாக உள்ள தொகுதியான விக்கிரவாண்டியில் வெற்றி பெற வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு, மற்றும் வன்னியர்களுக்கு பாமகவை விட அதிக நன்மைகள் செய்த கட்சி திமுகதான் எனப் பேசி வன்னியர்களின் வாக்குகளை பெற நினைத்தது திமுக.
ஆனால் தேர்தல் முடிவுகளில் வன்னியர்கள் வாக்குகள் அதிமுக சென்றுள்ளது ஊர்ஜிதமாகியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட 275 வாக்குச்சாவடிகளில் 21 வாக்குச்சாவடிகளில் மட்டும்தான் திமுக வேட்பாளர் புகழேந்தி கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளார். இதில் 18 தொகுதிகள் தலித் வாக்காளர்கள் அதிகமாக உள்ளத் தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தலித் வாக்காளர்கள் அளித்த வாக்கால்தான் திமுக கௌரவமானத் தோல்வியை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தேர்தலின் போது வன்னியர்கள் வாக்குகள் பின்னால் சென்றது; ஆனால் அவர்களைக் காப்பாற்றியிருப்பதோ தலித் வாக்குகள்தான்.