வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:55 IST)

தென் தமிழகம் நோக்கி புயல்; கடலில் சிக்கிய 1500 மீனவர்கள்! – உறவினர்கள் பதற்றம்!

வங்க கடலில் உருவாகியுள்ள புதிய புயல் தென் தமிழகத்தில் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் கடலுக்குள் சென்ற குமரி மீனவர்கள் இன்னமும் கரை திரும்பாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ள நிலையில் அதற்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தென் தமிழகத்தில் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 500க்கும் அதிகமான விசைப்படகுகள் கரை திரும்பியுள்ளன.

ஆனால் 200 நாட்டிகலுக்கு அப்பால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்னமும் கரை திரும்பாதது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 161 படகுகளில் 1500க்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தகவல் தொடர்புக்கு அப்பால் உள்ள அவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவோ அல்லது மீட்டு வரவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

முன்னதாக 2017ம் ஆண்டு ஓக்கி புயலால் ஏராளமான குமரி மீனவர்கள் இறந்ததால் இந்த புயல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.