பெரியார் பெயரை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதா? முதல்வர், உதயநிதி கண்டனம்..!
நேற்று பாராளுமன்றத்தில் திமுக எம்பி அப்துல்லா, பெரியார் குறித்து பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருவரும் இது குறித்து கூறியிருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது!
மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்!
மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்!
அமைச்சர் உதயநிதி: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் கருத்தினை மேற்கோள் காட்டி, கழக மாநிலங்களவை உறுப்பினர் சகோதரர் அப்துல்லா அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியது பாசிஸ்ட்டுகளுக்கு உதறலை ஏற்படுத்தியுள்ளது.
அப்துல்லாவின் பேச்சிலிருந்த தந்தை பெரியாரின் பெயரையும் - மேற்கோளையும் நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
அவைக் குறிப்பில் இருந்து தான் தந்தை பெரியாரின் பெயரை நீக்க முடியும், ஒரு போதும், மக்களின் மனக்குறிப்பில் இருந்து அவரது பெயரை நீக்கவே முடியாது.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் - கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரான பாசிஸ்ட்டுகளின் இந்த அட்டூழியங்களுக்கு விரைவில் முடிவு கட்டுவோம்.
Edited by Siva