ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் எப்போது- அமைச்சர் உதயநிதி தகவல்
சென்னையில் மிக்ஜாம் புயலாலும், அதிகனமழையாலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றது. இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் கொடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
மழை வெள்ளம் வடிந்துவிட்ட நிலையில், அவை ஏற்படுத்திய தாக்கத்தை துடைக்கும் வகையில், நம் சேப்பாக்கம் தொகுதி, சேப்பாக்கம் பகுதி, 62 (அ) வட்டம், சிங்கனசெட்டித் தெரு பகுதியைச் சேர்ந்த 1000 பொதுமக்களுக்கு அரிசி - மளிகை பொருட்கள் - போர்வை உள்ளிட்டவற்றை மழைக்கால நிவாரணமாக இன்றைய தினம் வழங்கினோம்.
நம்முடைய தொகுதி, சேப்பாக்கம் பகுதி, 114 ஆவது வட்டம், குப்புமுத்து தெருவில் வசித்து வருகின்ற பொதுமக்கள் 1000 பேருக்கு அரிசி - மளிகை பொருட்கள் - போர்வை ஆகிய நிவாரண உதவிகளை இன்றைய தினம் வழங்கினோம். மிக்ஜாம் புயல் - கனமழை பாதிப்பிலிருந்து மீண்டுள்ள மக்கள், இயல்புநிலைக்கு திரும்புவதற்குத் தேவையான பணிகளை தொடர்வோம்என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் கொடுக்கப்படும் எனவும், 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.